Wednesday, October 1, 2014

திருமுருக கிருபானந்த வாரியார் !!!

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.
பிறப்பும் கல்வியும்
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரைச் சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும், "வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.
சொற்பொழிவாளர்
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், "மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே" என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.
பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். (தேனி வரசித்தி விநாயகர் பேட்டை நவராத்திரித் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.)
வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.
வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை "சொல்லின் செல்வர்" என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.
போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.
வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.
இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.
பெண்களை மதித்தவர்
வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது" என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.
பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.
மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். "மலரினும் மெல்லிது காமம்" புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.
"தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்."
தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.
முருகப் பெருமான்
வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.
ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.
"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"
என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.
இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:
"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"
நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.
குழந்தைப் பற்று
வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.
இசைப்பயிற்சி
இவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.
இசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி"
வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
"குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்"
என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார்? சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.
சைவ சித்தாந்தம்
சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
இசுலாமியர் கருத்து
ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, "சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?" என்று கேட்டார்.
அதற்கு வாரியார், "இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே." என்று கூற "அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?" என்று கேட்டனர்.
இதனைக் கேட்ட வாரியார், "முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை" என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
"எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்" என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.
தமிழ் பற்றாளர்
வாரியார் தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு. தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.
தமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். "அப்பனே! வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். "அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ" என்றார். அவர் அடியார்.
அவர். "அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே" என்றார். "நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்" என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே? ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே? அவர்களுடன் பேசத்தான் தமிழ் கற்றுக் கொண்டார். இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள். முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார். கந்தக் கடவுள் வந்தார். எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார். முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் அகத்தியம் என்று ஓர் இலக்கணம் செய்தார். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.
நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் "ப" இப்படி போட்டால் "H" . இப்படிப் போட்டல் "L". இப்படிப் போட்டால் "ட". அறிவுக்குச் சிந்தனை. "அ" கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.
"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்" - தொல்காப்பியம்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" - திருக்குறள்.
"அகர உயிர்போல் இறை" -திருவருட்பயன்.
"அகரமு மாகி, அதிபனு மாகி" - அருணகிரியார்.
சில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார். அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார். நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. இங்கு உயர்ந்த நிலை எது? மலை. "தணிகை மால் வரையே" என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர்? ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெருமானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.
"சேயோன் மேய மைவரை உலகு" தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார்.
- இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.
அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! "அம்மை" யில் வரும் "ஐ" இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், "ஐ" க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார்.
இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,
"தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என்று கண்ணதாசன் கேட்டார்,
அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.
வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் "கிருபானந்த "லாரி" வருகிறது" என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. "வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!" என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.
வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.
எழுத்தாளர்
வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில நிகழ்ச்சிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.
தமிழ்த் திரையுலக ஈடுபாடு
வாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப "துணைவன்", "திருவருள்", "தெய்வம்", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.
இறை வழிபாடும் இறை சேவையும்
20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள்
அனைவரையும் இருக்கச் செய்தார்.
உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் "வயலூர் எம்பெருமான்…" என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .
ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?" என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.
வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.
"இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்" என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.
மறைவு
உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.
"ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்" என்றார் கருணாநிதி. வாரியார் இறந்த போது, தமிழ்ப் பெருங்கடல் என்று நாத்திகரான கலைஞர் கருணாநிதியே போற்றினார்.
ஜெயலலிதா வெளியிட்ட அனுதாப செய்தியில், "முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்புவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மீகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்" என்று குறிப்பிட்டார். இவர்களைப் போல் அரசியல் தலைவர்கள், அனைத்து சமயப் பெரியோர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்கள்.
சிறப்புகள்
கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே "சரவண பொய்கை குளம்" என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது "திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்" ஆகியிருக்கிறது.
காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.
சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிருவப்பட்டுள்ளது.
64 வது நாயன்மார்
நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்துப் பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பெரியவர்கள். குலத்தினால் பெரியவர்கள் அல்லர். சலவைத் தொழிலாளி ஒருவர் அதிலே இருக்கிறார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தீண்டாத குலத்திலே பிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அப்படி என்னென்னமோ குலத்தவர்கள் எல்லாம் அங்கே தொண்டராயிருக்கிறார்கள். அவர்கள் செல்வத்தினாலே பெரியவர்கள் அல்லர். கண்ணப்ப நாயனாருக்கு எழுத்து வாசனையே கிடையாது. ஆனால், அவர்கள் எதிலே பெரியவர்கள்? வேண்டாமையிலே பெரியவர்கள். நாமெல்லாம் இந்த உலகத்திலே பெரியவர்கள் ஆக வேண்டுமென்றால் யாரிடமும், கடவுளிடம் கூட ஒன்றும் கேட்கக் கூடாது. ஆண்டவனே! எனக்கு ஒன்று கொடு என்று கேட்காதீர்கள்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்"
என்பார் திருவள்ளுவர். அதனாலே நாயன்மார்கள் பெரியவர்கள்.
இந்த நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் பாடிய நாயன்மார்கள் 60 பேர். 63 பேர் அல்லர். அநேகம் பேர் 63 என்பார்கள். அவர்களெல்லாம் தெளிவாகப் படிக்காதவர்கள். 50, 60, 70 என்றுதானே தருவோம். 63 என்று யார் தருவார்கள்?
சுவாமிமலைக்குப் படிகள் 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 ஆம் ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. அப்படியானால் கணக்கு 60 என்றுதான் வரும். 63 வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார்கள் 60 பேர். அப்புறம் எப்படி 63 பேர் ஆனது? சுந்தரமூர்த்தி நாயனார் மறைந்து 100 வருடங்கள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் எனும் ஆதிசைவ இளைஞர் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மார்களை சற்றி விரிவாகப் பாடுகிறார். அப்போது அவர் 60 நாயன்மார்களைப் பாடி, அந்த 60 நாயன்மார்களைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அவரது தந்தை, தாயைச் சேர்த்து 63 ஆக மாற்றினார்.
வாரியார் 60 நாயன்மார்கள் 63 நாயன்மார்கள் ஆன வரலாற்றைச் சொன்னார்கள். வாரியாரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள் நாயன்மார்கள் 60 என்றும், 63 என்றும் சொல்வது தவறு. மொத்தம் 64 நாயன்மார்கள். 64 வது நாயன்மார் வேறு யாருமல்ல. திருமுருக கிருபானந்த வாரியார்தான். ஆன்மிகப் பற்றுடைய பலரும் சொல்கிறார்கள். ஆயகலைகள் 64 என்று சொல்வதுண்டு. அதுபோல் நாயன்மார்கள் 64 என்று சொல்வதில் தவறேதுமில்லை. அறுபத்து நான்காம் நாயன்மார் திருமுருக கிருபானந்த வாரியார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வாரியாரும் நாயன்மார்களைப் போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் வாரியார் சுவாமிகளும் ஒருவர் என்பதை நாமும் நினைவில் கொள்வோம்.
-உ. தாமரைச்செல்வி @ http://murugan.org/

சப்த மாதர்கள்

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது
சப்தகன்னியர்கள் பிறந்த கதை
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.
ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
கௌமாரி
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
வாராஹி
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
இந்திராணி
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.
சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

12 ஜோதிர்லிங்கங்கள்

இறைவன் ஒளிமயமானவன். அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது.
ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்க ளில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர் களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.
ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆக, முழுமுதற் கடவுளாம் சிவனை - ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழி பாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதை யும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜ யோக தியானம் எனப்படுகிறது. மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய் விளங்கு பவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும்; புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட- துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
12 ஜோதிர்லிங்கங்கள்

காசி விஷ்வநாதர் (வாரணாசி- உத்திர பிரதேசம்)
பாரதத்தின் அனைத்து தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி.
பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப் படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்கு மாறு கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. இந்த தலம் கர்மத்தின் தீய கணக்கினை அழிக்கக்கூடியது எனவும்; அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடிய சிவலிங்கத்தை சிவனே படைத்ததாகவும் கூறப்படு கிறது. உலகத்தையே படைக்கும் காரியத்தைச் செய்வித்ததால் அங்குள்ள லிங்கமே விஷ்வநாத் என்றழைக்கப்படுகிறது.
மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம்- ஆந்திரா)
இங்குள்ள மூலவர் எட்டு அங்குல உயரத்தில் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் ஜோதிர்லிங்கம் என்ற பெயரில் 11 வேறு கோவில்களும் உள்ளன. இக்கோவிலுக்குப் பின்னால் சிறிய குன்றின்மேல் பார்வதி கோவில் ஒன்றும் உண்டு. இத்தேவி இங்கு மல்லிகாதேவி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சிவனின் பெயர் அர்ஜுனன். எனவேதான் இங்குள்ள மூலவரை மல்லிகார்ஜுனர் என்றழைக்கிறோம்.
ஓங்காரேசுவரர் (மத்தியப் பிரதேசம்)
இங்குள்ள சிறப்பு யாதெனில், இங்கே ஓங்காரேசுவரர் மற்றும் பரமேஷ்வர் என்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அமலேஷ்வர் என்கிற வேறு பெயரும் உண்டு. இக்கோவிலுக்கு சற்று தூரத்தில் நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு சற்று தூரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து விடுகிறது. இடைப்பட்ட தீவுப் பகுதியில்தான் இத்திருத்த லம் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்தோ டும்போது ஒன்று நர்மதா எனவும், மற்றொன்று காவேரி எனவும் அழைக் கப்படுகிறது. இத்தீவில் தான் மகாராஜா மாங்கதன் இறைவனை வேண்டி நின்றதாகவும், அதற்கு இறைவன் காட்சியளித்து அருள்புரிந்ததால் அவரது பெயரே இத்தீவிற்கும் சூட்டப்பட்டு மாங்கத தீவு என்றழைக்கப்படுகிறது.
சோமநாதர் (குஜராத்)
ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம். இந்த ஜோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திர பகவான், சிவனை வேண்டி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இறைவனும் அவரது தவத்தை மெச்சி வரம் அளித்தார். எனவேதான் இந்த லிங்கம் சந்திரன் பெயரால் (சோமன்-சந்திரன்) வழங்கி வருகிறது. இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் மூலமே மனிதர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். மேலும் மேலும் மனம் நிறைந்த பலன்களை அடைந்து, மரணத்திற்குப்பின் சொர்க்கத்தையும் அடைவதாகக் கூறப்படுகிறது. அரபிக்கடல் ஓரத்தில் இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
இராமநாதசுவாமி (இராமேஸ்வரம்- தமிழ்நாடு)
பாரதத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இராமேஸ்வரம்.
ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. பிரதான மூர்த்தி இராமநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். இந்த லிங்க மூர்த்திக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, இத்தலத்திலுள்ள மண்ணை எடுத்து கங்கையில் கரைப்பது விசேஷம். எனவேதான் வடநாட்டு யாத்ரீகர்கள் நிறையபேர் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள 22 தீர்த்தங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் நீராடவில்லையெனில் இராமேஸ்வர யாத்திரை நிறைவு பெறாது என்றே கூற வேண்டும். இறுதி தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அக்னி தீர்த்தம் என்ற பெயரில் வங்கக்கடல் விளங்குகிறது.
நாகேஸ்வரர்
இங்கு மூலவர் நாகேஸ்வரர் என்றும்; பார்வதி தேவி நாகேஸ்வரி என்றும் பூஜிக்கப்படுகின்றனர். இன்று இந்த ஜோதிர்லிங்கம் பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில், கவர்னர் மாளிகைக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. ஒரு நடைபாதை பாலத்தின் மூலமே இக்குகையைச் சென்றடைய முடியும்.
கேதார்நாத் (உத்திரகாண்டம், உத்திர பிரதேசம்)
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களிலும் இயற்கையின் எழில் சூழ்ந்த அழகுமிக்க தலம் கேதார்நாத் ஆகும். மந்தாகினி நதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இத்தலத்தைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி. இந்த இமாலய மலைத் தொடரிலிருந்துதான் மந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. இங்குள்ள கேதாரேஷ்வர் மற்றும் பத்ரி நாராயணரை பக்திச் சிரத்தையுடன் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள் விலகிப் போகும்; எண்ணங்கள் பூர்த்தியாகும் என சிவபுராணம் கூறுகிறது. மேலும் இந்த யாத்திரையின்போது மரணம் எய்துவோருக்கு மோட்சம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.
கேதார்நாத்திற்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் மிக அவசியமாக நேபாளத்திலுள்ள பசுபதிநாத் மூலவரையும் சென்று தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். ஏனெனில் பரமனின் தலைப்பாகம் பசுபதி நாத் என்றும்; பாதப்பகுதி கேதார்நாத் என்றும் கூறப்படுகிறது.
மகாகாளேஸ்வர் (உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)
உஜ்ஜயினி என்றும் அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி விசாகத்தின் போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.
இரு பிரிவுகளாக வளர்ந்து நிற்கிறது மகா காளேஸ்வர் கோவில். மேல் தளத்தில் ஓங்காரேஸ்வர் சிவலிங்கம் பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்ப்பகுதியில் மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவனைத் தரிசனம் செய்வதால் ஒருவருக்கு கனவில்கூட துக்கம் ஏற்படாது என்றும்; எந்தெந்த ஆசைகளுடன் பூஜை செய்கின்றனரோ அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.
வைத்தியநாதேஸ்வரர் (பரளி, மகாராஷ்டிரா)
ஔரங்காபாத்திற்கு அருகில் பாபானி ரயில் நிலையத்தருகில் பரளி வைத்திய நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது கைலாசத்திலிருந்து இராவணனால் கொண்டு வரப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த லிங்கம் சிறு மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இக்குன்றில் எவரது சடலம் எரியூட்டப் படுகிறதோ, அவர்கள் நேரடியாக மோட்சம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பெருவாரியான மக்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை இங்கே கொண்டு வந்து தகனகிரியை செய்தனர். இந்த வழக்கம் சென்ற நூறு ஆண்டு களுக்கு முன்பு வரை இருந்து வந்தது. எனவே இந்த தலம் தகன பூமியின் பேரால் மிகவும் பிரபல மடைந்துள்ளது. இதைப் பின்பற்றி பாரதத்தின் பிற நகரங்களிலும்கூட தகன பூமியில் சிவபெருமானின் கோவில் (சுடலை காப்பவர்) அமைத்துள்ளனர்.
குகமேசம் (கிருஷ்ணேஷ்வர்- மகாராஷ்ட்ரா)
வடமொழியில் குஷ்மேஷ்வர் என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் பெயர் கிருஷ்ணேசுவரர் ஆகும். ஔரங்காபாத் மற்றும் தௌலதாபாத் நிலையங்களுக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளுக்கருகில் இக்கோவில் அமைந்துள்ளது.
திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்ட்ரா)
நாசிக் ரோடு அருகில், பிரம்மகிரி மலையில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகப்பெரிய நிலப்பரப்பில், நாலாபுறமும் மிக உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது. உள்பிராகாரத் தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிரதிமைகள் என்று கூறப்படு கின்றன. இந்த ஜோதிர்லிங்கங்களைத் தொட்டு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் அமிர்த குண்டம் என்னும் பெயரால் புஷ்கரணி (திருக்குளம்) உள்ளது.
பீமா சங்கர் (அருணாசலபிரதேசம்)
இக்கோவில் பழைய அஸ்ஸாமில் தென்புறத்தி லுள்ள- தற்போதைய அருணாசல பிரதேசத்தின் தேஜி நகரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பீமாசங்கர் மற்றும் பிரம்மா குண்டம் (பரசுராம் குண்டம்) என்னும் இரண்டு புகழ் பெற்ற தீர்த்தங்கள் உள்ளன.
கும்பகர்ணனின் மகனான பீம சூரன் அனைவருக்கும் பெருந்துன்பம் விளைத்தான். அப்போது சிவன் தோன்றி சூலத்தால் பீம சூரனை வதம் செய்தார். அந்த சாம்பலிலிருந்து அநேக காரியங்களுக்குப் பயன்படும் மருந்து வகைகள் உற்பத்தியாயின என்றும்; "பூதம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்ட வல்லது என்றும் கூறப் படுகிறது.
"தேவர்கள், முனிவர்கள், மக்களுடைய பாதுகாப் பின் பொருட்டு, யுத்தம் செய்யாதோருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடிய இந்த மண்ணில், தாங்கள் அவசியம் இருந்து காத்தருள வேண்டும்' என்கிற பிரார்த்தனையின்பேரில் பீமாசங்கர் என்னும் பெயரில் ஈசன் இங்கு கோவில் கொண்டார்.
நன்றி :-http://mangayarulagam.blogspot.in/

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம். உதாரணத்திற்கு கோவில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம்.
தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம். பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வட மொழியில் 'ஷோடச உபசாரா' என்று சொல்வார்கள்.
பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்ப தற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரைபோட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. 'நான்' என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.
அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காணமுடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை. இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி.
நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது. திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.
உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார். 'விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!' இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம்பொருளை அறியுங்கள்.
அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள். (ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.) கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப்படுகிறது.
கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடேஇல்லாமல் முடிந்து விடுகிறது. கற்பூரம் 'நான், எனது' என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான்.
அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம். தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.
'இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும். என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும் என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது. எந்திரத்தனமாகக் கோவிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள்.
அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள். உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்! சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.
அதற்கான பதிலையும் பார்ப்போம். புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை.
அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.
வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
Thanks: மாலைமலர்