Wednesday, June 24, 2015

உத்தவ கீதையில் - குருமார்கள்!

ஸ்ரீஉத்தவகீதையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் பக்தனும் நெருங்கிய நண்பனுமாகிய ஸ்ரீஉத்தவருக்கு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஸ்ரீஉத்தவகீதை ஸ்ரீமத் பாகவத மகா புராணத்தின் பதினோராவது ஸ்கந்தமாக வருகிறது. (தசம ஸ்கந்தம்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் லீலா விநோதங்களை விவரிப்பது -பாகவத மகாபுராணத்திலேயே நம்மை மிகவும் ஈர்க்கக்கூடியது) இங்கே நாம் எடுத்துக்கொண்ட விஷயம் ஸ்ரீஉத்தவகீதையில், ஸ்ரீஉத்தவருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த ‘சந்நியாச லக்ஷணம்’ என்பது பற்றி மட்டுமே.
ஸ்ரீஉத்தவர் கேட்கிறார் “நான், எனது என்னும் அகங்கார, மமகாரச் சுழலில் அறியாமையால் சிக்கி, உற்றார், உறவினர் பாசத்தில் மூழ்கியிருக்கும் தமக்கு சந்நியாச லக்ஷணம் பற்றி எளிய முறையில் விளக்கியருளுமாறு வேண்டுகிறார்.
அதற்குப் பகவான் சொல்கிறார் “மனிதன் தனக்குத்தானே ஆசாரியன். தனக்கு நன்மை விளைவிக்கக் கூடியதை, பிரத்தியட்சம், அனுமானம் என்ற இரு முறைகளாலும் செய்து கொள்ளும் ஆற்றலையுடையவன்” என்று இன்னும் பலவும் கூறிவிட்டு ஒரு புராதன வரலாற்றையும் எடுத்துரைக்கிறார்.
இவ்வரலாறு அவதூதராக விளங்கிய தத்தாத்ரேயருக்கும் யயாதியின் குலத்தோன்றலாகிய யது மன்னனுக்குமிடையே நடந்த உரையாடலாக உள்ளது. வாலிபவயது அவதூத பிராமணர் ஒருவரைப் பார்த்து யது மன்னர் கேட்கிறார் “அந்தணரே! தாங்கள் கர்மா எதுவும் செய்வதில்லை; அப்படியிருந்தும் தங்களுக்கு மிகவும் ஆழமான, தெளிந்த நல்லறிவு சித்தித்தது எப்படி?”
அந்த அந்தண வாலிப அவதூதர் பின்வரும் நீண்ட விளக்கத்தைத் தந்தார். “மன்னா! எனக்குப் பல ஆசாரியர்கள். அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் பலத்தில்தான் நான் உலகப் பற்றின்றி இவ்வாறு அவதூதனாகத் திரிந்து கொண்டிருக்கிறேன். என் குருக்கள் யார் தெரியுமா? மண், வாயு, ஆகாயம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டிற்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரா என்னும் பறவை, பாலகன், கன்னிப்பெண், அம்புதொடுப்பவன், ஸர்ப்பம், சிலந்திப் பூச்சி, குளவி போன்ற இருபத்து நான்கு ஆசிரியர்கள்! இவர்களிடமிருந்து யான் கற்ற பாடங்கள் என்ன என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள்!
1. பூமியிடமிருந்து கற்றது:
மற்ற பிராணிகளால் எவ்வளவு துன்புறுத்தப்பட்டாலும், அவையெல்லாம் தெய்வசங்கல்பத்தின்படி அதாவது பிராரப்த கர்மாவின்படி ஏற்படுகின்றன என்ற உண்மையை பூமாதேவியின் மூலமாகக் கற்றுக் கொண்டேன். பூமியின் எல்லாச் செயல்களும் பிறர் நன்மையின் பொருட்டே என்பதையும், மலைகளும், மரங்களும் கூடப் பரோபகார சிந்தனையை உணர்த்துகின்றன என்பதையும் அறிந்து கொண்டேன்.
2.வாயுவிடமிருந்து கற்றது:
காற்று எல்லா இடங்களிலும் வீசிக்கொண்டிருந்தாலும், எதனுடனும் ஒட்டு, உறவு கொள்வதில்லை. பிற பொருள்களின் மணத்தைத் தாங்க நேர்ந்திடினும் அதை அங்கங்கே விட்டுவிடுகிறது. அதேபோல, யோகியும் எங்கும் சுற்றித் திரிந்தாலும் அங்கங்கே காணப்படும் குண தோஷங்களால் பாதிக்கப்படாமல் பற்றின்றி இருக்க வேண்டும்.
3.ஆகாயம் கற்றுக்கொடுத்த பண்பு:
ஆகாயம் எங்கும் நிறைந்து அனைத்தையும் அடக்கி வைத்துக்கொண்டுள்ளது. இது பரப்பிரும்மம் ஸ்தாவர ஜங்கம (நிற்பன, செல்வன) எல்லாப் பொருள்களினுள்ளும் வியாபித்து உள்ளதை அறிவுறுத்துகிறது. அதேபோல ஆன்மாவும் எங்கும் நிறைந்துள்ளது என்னும் தத்துவத்தை ஞானி அறிந்து கொள்ளல் வேண்டும். மேலும் மேகங்கள் ஆகாயத்திலேயே சஞ்சரித்து வந்தாலும், ஆகாயம் அவற்றுடன் ஒட்டிக் கொள்வதில்லை. அதுபோலவே ஸத்வம் முதலிய குணங்களின் உருவத்தோற்றங்களான அக்னி, நீர், அன்னம் ஆகியவற்றினாலான சரீர இந்திரியங்களுடன் ஆன்மாவாகிய புருஷனுக்கு எவ்வித உறவும் இல்லை என்பதையும் உணரவேண்டும். இதுவே ஆகாயம் நமக்குக் கற்றுத்தரும் உண்மை.
4.தண்ணீர் கற்றுத் தரும் பாடம்:
தண்ணீர் இயற்கையில் சுத்தமானது. மனத் திருப்தியளிப்பது. தூய்மைப்படுத்துவது. இதுபோலவே ஒரு ஞானியின் இயல்பும் சுத்தமானது. அனைவருக்கும் திருப்தி அளிப்பது மேலும் தன் பார்வை உபதேசமொழிகள் ஆகியவற்றால் மக்களைத் தூய்மைப் படுத்துவது.
5.அக்னி சொல்லும் உண்மை:
முனிவர் தன் தவம் என்னும் அக்னியால் பிரகாசித்து தெய்விக ஒளி வீச வேண்டும். அக்னியில் நல்லது, கெட்டது என எதைப் போட்டாலும் அவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதேபோல ஞானியும் குற்றமுடையது என்று எதையும் ஒதுக்கித் தள்ளாமல் இருக்க வேண்டும். அவருடைய ஞானாக்னியில் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டு விடுகின்றன.
6.சந்திரன் தரும் பாடம்:
சந்திரனின் கலைகள் வளர்ந்து, தேய்கின்றன. அதுபோலவே சரீரமும் தோன்றியதிலிருந்து இறுதி வரை மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகிறது. ஆனால் இம்மாற்றங்களுக்கும், ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எவ்வாறு அக்னியின் ஜுவாலைகள் தோன்றி மறைகின்றனவோ அவ்வாறு அனைத்துப் பிராணிகளின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பினும் கண்களுக்குத் தெரிவதில்லை.
7.சூரியன் மூலம் கற்றது:
எவ்வாறு சூரியன் தன் கிரணங்களின் மூலமாகத் தண்ணீரை உறிஞ்சி, அதையே மழையாகப் பொழிவித்து விடுகிறதோ அவ்வாறே பொருளைப் பெற்றுக் கொள்வதிலும், வழங்குவதிலும் ஒட்டுதலில்லாமல் யோகியானவர் இருத்தல் வேண்டும். சூரியன் பல நீர் நிலைகளில் பிரதிபிம்பத்தால் பலவாகத் தோன்றினாலும் இருப்பது ஒரே ஒரு சூரியன்தான் என்பதுபோல உண்மையில் இருப்பது ஒரே ஆன்மா என்பதை உணரவேண்டும்.
8.புறாக்கள் மூலம் அறிந்த உண்மை:
ஆண், பெண் ஜோடிப் புறாக்கள் தம் அன்பிற்குகந்த குஞ்சுகள் வேடனின் வலையில் சிக்கிக் கொண்டதால் அவற்றின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தாமும் அவ்வலையில் வீழ்ந்து சிக்கிக் கொண்டன. இதே போலத்தான் குடும்ப வாழ்க்கை வாழும் மனிதனும் மன அமைதியை இழந்து புறாவைப் போல குடும்பத்தில் கட்டுண்டு தன் நிலையழிந்து போகிறான். முக்தியை அடைவதற்கான சாதனமாக மனிதப்பிறவியைப் பெற்றிருந்தும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் உலகப் பற்றிலேயே ஆழ்ந்திருப்பவர் பெற்ற பேறு வீணானதே அல்லவா? இவ்வுண்மையைத் தான் புறாக்களின் மூலம் தாம் கற்றதாகக் கூறுகிறார் அவதூதர்.
9.மலைப்பாம்பு சொல்லித்தரும் படிப்பினை:
மலைப்பாம்பு உணவைத் தேடி, தான் செல்வதில்லை; தானாக எது கிடைக்கிறதோ அதையே புசித்து திருப்தியடைகிறது. அதுபோல யோகியானவன் கிடைத்த உணவு சுவையாக இருக்கிறதோ, இல்லையோ, நிறையவோ அல்லது குறைவாகவோ அதனால் மகிழ்ச்சியடைய வேண்டும்.
10.கடல் கற்றுத்தரும் பாடம்:
ஒருயோகியானவன் பெருங்கடலைப்போல மலர்ச்சி ஆரவாரத்துடனும், கம்பீரமாகவும், ஆழங்காண முடியாதவனாகவும், தாண்டிச் செல்ல முடியாதவனாகவும் (அதாவது அலட்சியப் படுத்த முடியாதவனாகவும்) கலக்கமுடியாதவனாகவும் (அதாவது சாதாரண உணர்வுகளால் பாதிக்கப்படாத வரை) எப்போதும் அமைதியில் நிலைபெற்றவனாகவும் இருக்க வேண்டும். நதிகள் கடலில் கலப்பதால் கடல் கரை கடந்து பெருகிவருவதில்லை. நதிகளின் நீர் வராவிட்டாலும் அது வற்றி விடுவதில்லை. அதுபோலவே யோகியானவன் தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சிப் பெருக்கடையாமலும், நிறைவேறாத போது தளர்ந்து கலக்கமடையாமலும் இருக்க வேண்டும்.
11.விட்டிற்பூச்சி உணர்த்தும் உண்மை:
மாயையால் மதிமயங்கிய மனிதன் பெண், பொன் முதலிய பொருள்களால் வசீகரிக்கப்பட்டுத் தன் அறிவை இழந்து அவற்றில் ஈடுபட்டு உயிரை இழக்கிறான். இது விட்டிற்பூச்சியின் இயல்பைப் போன்றது. இவ்வாறு யோகி இருக்கக்கூடாது என்னும் உண்மையைத் தான் விட்டிற்பூச்சி உணர்த்துகிறது என்கிறார் அவதூத சந்நியாசி.
12.தேனீக்கள் மூலம் தெரிந்து கொண்டது:
எப்படி தேனீயானது மலரைச் சேதப்படுத்தாமல் அதன் தேனை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறதோ அதுபோலவே புத்திசாலியான ஒரு மனிதன் அனைத்து சாஸ்திரங்களிலிருந்தும் சாரமான தத்துவங்களை மட்டும் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். எப்படித் தேனை எடுப்பதற்காக தேன் கூடுகள் பிழியப்பட்டு தேனீக்கள் மரிக்கின்றனவோ அவ்வாறின்றி யோகியானவன் அன்றாடம் தன் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர நாளைக்கு என்று சேமித்து வைத்துக் கொள்ளலாகாது. இதுவே தேனீக்கள் கற்றுத் தரும்பாடம்.
13.யானை தரும் பாடம்:
பெண் யானையிடம் ஆசைகொண்டு அதனை நோக்கிச் செல்லும் ஆண் யானை அதைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொள்கிறது. அதைக் கருத்தில் இருத்தி துறவியானவன் பெண் மோகத்தை அறவே விட்டு விடவேண்டும்.
14.தேன் எடுப்பவன்:
லோபிகள் தானும் செலவழிக்கமாட்டார்கள்; பிறர்க்கும் அளிக்கமாட்டார்கள். இவர்கள் சேர்த்து வைத்த தனத்தை வேறு யாரோதான் அனுபவிப்பார்கள். இவ்வுண்மையைத் தான் தேன் சேகரிப்பவனிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவதூதர் சொல்கிறார்.
14.மான் கற்றுத்தரும் படிப்பினை:
எவ்வாறு மானானது வேடனின் இசையில் மயங்கிக் கடைசியில் வேடனின் கையில் அகப்பட்டுக் கொள்கிறதோ அவ்வாறே முற்றும் துறந்த துறவி உலக இன்ப சம்பந்தமான பாடல்களைக் கேட்பதில் மனத்தைச் செலுத்தலாகாது.
16. மீன் என்ன பாடம் புகட்டுகிறது?:
வாய் ருசிக்கு அடிமைப்பட்டு தூண்டிலில் உள்ள இரையின் பொருட்டு மீன் தூண்டிலில் சிக்கி மாள்கிறது. அதேபோலத்தான் மனிதனும் சுவை நுகர் புலனான நாவைக் கட்டுப்படுத்தாமல் பல இன்னல்களுக்காளாகிறான். (இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இக்காலத்தில் பல வெளி உணவுகளையும், பக்குவப்படுத்தப்பட்டு சந்தையில் விற்கும் உணவுப் பொருள்களையும் உண்டு பலவித நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். சுவையான உணவென்று நிறையக் கொழுப்புகள் முதலியன சேர்ந்த உணவுகளை உண்டு நோய்வாய்ப்படுகின்றனர். இது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவிஷயம்) ஆனால் இங்கே அவதூதர் சொல்வதன் தாத்பர்யம் என்னவென்றால் ஒருவன் சுவைப்புலனை அடக்காவிடில் மற்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையைத்தான் உரைப்பதாகக் கொள்ளவேண்டும்.
17. பிங்களை என்னும் வேசி புகட்டும் பாடம்:
இந்த வேசி தன் ஈன வாழ்க்கையை வெறுத்து, ஞானம் பெற்று உலகாயத காம போகங்களைத் துறந்து, உலக நாயகனையே சரணடைகிறாள். அதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாவித உலக இன்பங்களிலிருந்தும் விடுபட வைராக்யம் பெறும்போது தான் ஆன்மா கடைத்தேறமுடியும் என்பதுதான்.
18.குரா என்னும் பட்சி அறிவுறுத்தியது விஷயம்:
குராப்பறவை ஒரு மாமிசத்துண்டை வாயில் கௌவிக் கொண்டு பறந்தபோது மற்ற பறவைகள் அம்மாமிசத் துண்டைப் பற்றிக்கொள்ள வேண்டி அதைத் துரத்திச் சென்றன. அதனால் வாயில் பற்றியிருந்த மாமிசத் துண்டைக் கீழே போட்டவுடன் மற்ற பறவைகள் அதைத் துரத்துவதை விட்டுவிட்டு அம்மாமிசத் துண்டத்திற்காக அதை நோக்கிச் சென்றுவிட்டன. அது போலத்தான் பொருளைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதற்குக் காவல் இருப்பதைவிட தான, தர்மங்களுக்கு எனச் செலவிட்டு வந்தால் அமைதியும், இன்பமும் கிடைக்கும் என்று உணர்த்தியது.
19.பாலகன் மூலம் அறிந்து கொண்டது:
பாலகனுக்கு மான, அவமான பேதமில்லை; வீடு, மைந்தர் பற்றிய கவலையில்லை. தன்னிலேயே ஆனந்தப்பட்டுக்கொண்டிருப்பான். அது போலவே ஞானியானவனும் சூது, வாதில்லாமல் வேற்றுமை உணர்வின்றி குணங்களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.
20. கன்னி கற்றுத் தந்தபாடம்:
தன் கை வளையல்கள் ஒன்றுக்கொன்று உரசி சப்தம் போடாதவாறு கைக்கு ஒரே வளையலை வைத்துக் கொண்டாள் இவள். அதனால் அறிந்து கொண்ட உண்மை, பல பேருடன் வசித்தால் சண்டை, சச்சரவு உண்டாகும். இருவராக இருப்பின் வெறும் பேச்சு வளரும். பெண்ணின் கைக்கங்கணத்தைப் போலத் தனியாக இருந்தால் மன அமைதியுண்டாகும்.
21.அம்பு வீசுபவன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது:
எப்படி அம்பெய்பவன் லட்சியம் ஒன்றையே மனத்தில் கொண்டு தன் பணியில் கவனத்துடன் இருக்கிறானோ, அப்படியே யோகியானவன் வைராக்கியம், அப்பியாசம் முதலியவற்றால் ஆன்ம சாதனையை சஞ்சலமில்லாத மனத்துடன் தொடர வேண்டும் என்னும் உண்மையை அம்பு வீசுபவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
22. ஸர்ப்பம் உணர்த்தும் உண்மை:
ஸர்ப்பம் தனித்தே இருக்கும்; கரையான் புற்றில் வசிக்கும். இது போலவே யோகியானவன் தனித்தே இருக்க வேண்டும். சொந்தமான இருப்பிடம் என்று கொள்ளலாகாது. குறைந்த அளவு பேச்சோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
23.சிலந்திப் பூச்சியின் தன்மை:
சிலந்தி எவ்வாறு தன்னுடலிலிருந்தே நூலிழையைக் கொண்டுவந்து வலையைப் பின்னிவிட்டுத் தானே அந்த இழையைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறதோ அவ்வாறே இறைவனும் தனக்குள்ளிலிருந்து அண்ட கோசத்தை வெளியே கொண்டுவந்து தன் விருப்பப்படி பல லீலைகள் புரிந்தபின் கல்பமுடிவில் தனக்குள் இழுத்துக்கொள்கிறார். இதுவே சிலந்தி உணர்த்தும் பாடம்.
24.குளவி கற்றுக்கொடுப்பது:
உடல் எடுத்தவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அதே உருவத்தை அடைகிறான். குளவியும் என்ன செய்கிறது? கூட்டினுள் வைக்கப்பட்ட புழு அதையே நினைத்துக் கொண்டு தானும் குளவியாகவே மாறிவிடுகிறது. பகவானையே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தானாகில் அவன் பகவத் ஸ்வரூபனாக ஜீவன் முக்தனாக ஆகிவிடுகிறான். இந்த உண்மையை நாம் குளவியைக் கண்டு உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு இருபத்து நான்கு சேதன, அசேதன ஆசாரியர்களைப் பற்றி யது மன்னனுக்கு விவரித்த அவதூத ஞானி மேலும் கூறுவார்: “அரசே! வைராக்கியத்திற்கும், விவேகத்திற்கும் காரணமாக இருக்கும் இந்தச் சரீரமும் எனக்கு குருவாகிறது. இவ்வுடல் பிறப்பு, இறப்பு தன்மையுடையது. உலகியலில் மிகத் துன்பத்தையும் தரக்கூடியது. முடிவில்லாத துன்பத்தினின்றும் எவ்வாறு விடுதலை பெறுவது என்ற பரமாத்ம விசாரத்திற்கு இடம் தருகிறது. வைராக்கிய விவேகங்களால் ‘இவ்வுடல் பிறர்க்கு உரியது’ (இது ‘நான்’ அல்லன்) என்று நிச்சய புத்தி உண்டாகிறது. அதனால் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்”
by V. Karthikeyan
http://atmaanubhavangal.blogspot.in/

No comments:

Post a Comment