Sunday, September 7, 2014

தெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)

ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் சாத்தப்பன், செங்கமலத்தம்மை தம்பதியருக்கு பிறந்தவர் பாம்பன் சுவாமி. இவரது இளவயது பெயர் அப்பாவு.
ஆசிரியர் முனியாண்டியா பிள்ளையிடம் தமிழ் கற்றார். ஒருநாள், பாய்மரப்படகில் சென்றபோது, துறவி ஒருவர் சிவசிவ என்று ஜெபிப்பதைக் கேட்ட அப்பாவு, தானும் அந்த மந்திரத்தை ஜெபித்தார். முக்கால் அணாவுக்கு (9 காசு) கந்தசஷ்டி கவசம் புத்தகம் வாங்கிப் படித்தார். அந்நூலில் கூறியிருந்தபடி, தினமும் 36முறை பாராயணம் செய்தார். படிப்பை மறந்தார். எந்நேரமும் பக்தியிலேயே மூழ்கிப் போனார்.
ஒருநாள் சூரியன் உதய வேளையில் ஒரு தென்னந்தோப்பிற்கு அப்பாவு சென்றார். அங்கே கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. முருகப்பெருமானே! அருணகிரிநாதரைப் போல நானும் உன்னைப் பாடி மகிழ வேண்டும். அடியேனுக்கும் அருள்புரிவாயாக!, என்று கைகுவித்து நின்றார். அப்போது கங்கையைச் சடையிற் பரித்து என்னும் மங்கலத் தொடர் மனதில் எழுந்தது. அதையே முதலடியாகக் கொண்டு பாடல் எழுதினார். தினமும் காலையில் ஒரு பாடல் எழுதுவார். இப்படியாக நூறு பாடல்கள் முடிந்தன.
ராமேஸ்வரத்திலிருந்து வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு எழுதிய ஓலைச்சுவடியைப் படித்தார். அதை வித்வான் குமாரசாமி பிள்ளையிடம் காட்டி அதிலிருந்த கவிதை நயம், பக்தி ரசத்தைப் பாராட்டினார். சில நாட்களுக்குப் பின் மீண்டும் பாம்பனுக்கு வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு! இன்று மாலை என் வீட்டிற்கு வா!, என்று அழைத்துச் சென்றார். மறுநாள் விஜயதசமி. அன்றைய தினம், அப்பாவுவை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராட்டினார். அவரது காதில் ஆறெழுத்தான முருகமந்திரமான சரவணபவ என்பதை உபதேசித்தார். சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளும்படி அன்புக் கட்டளையிட்டார். அன்றுமுதல் அப்பாவு, அந்த மந்திரஜெபத்தில் விருப்பம் கொண்டார்.
சேதுமாதவ ஐயரின் வேண்டுகோளின்படி, மதுரையைச் சேர்ந்த காளிமுத்தம்மையைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண், ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். அப்பாவு 1891ல் துறவு பூண்டு பழநி செல்ல எண்ணம் கொண்டார். தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம், நாளைப் பழநி செல்கிறேன், என்றார். அந்த நண்பர், முருகனின் கட்டளையா இது?, என்று கேட்க,ஆம் என்று பொய்யாகத் தலையசைத்தார். அப்போது, முருகப்பெருமான் அப்பாவுவைப் பார்த்து, ஏன் பொய் சொன்னாய் என்று கோபித்தார். உடல் நடுங்கிய அப்பாவு, முருகா! ஆன்மலாபம் கருதி இப்படிச் சொல்லிவிட்டேன், என்றார்.
ஆனால், முருகன் அவரிடம், பழநிக்கு, நான் அழைக்கும் வரை நீ வரக்கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அப்பாவுவும் ஒப்புக் கொண்டார். வாழ்வின் இறுதிவரை, முருகன் அங்கு அழைக்கவும் இல்லை. பாம்பன் சுவாமி பழநிக்குச் செல்லவும் இல்லை. ஆன்மிகத்தில் பொய் கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
தந்தை காலமானதும், பாம்பன் சுவாமிக்கு வீட்டுப் பொறுப்பை ஏற்கும் நிலை வந்தது. ஒருநாள் தென்னந்தோப்பிற்குச் செல்லும்போது, காலில் முள் தைத்து ரத்தம் வழிந்தது. வேதனையுடன் முருகனை எண்ணி கண்ணீர் வடித்தார். அன்றிரவு ஒரு தச்சரின் கனவில் முருகன் தோன்றி, பாம்பன் சுவாமிக்கு பாதக்குறடு (காலணி) செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
பாம்பன் சுவாமி, உப்பு, புளி,காரம் சேர்க்காமல் உண்ணத் தொடங்கினார். ஆறுமாதத்தில் உடல் மிகவும் மெலிந்து போனது. இதைக் கண்ட ஒருவன், வாழ்வில் தகாத விஷயங்களைச் செய்தால் உடம்பு இப்படித்தான் இளைத்து போகும், என்று ஏளனம் செய்தான். வைத்தியரின் ஆலோசனைப்படி உப்பு சேர்க்க எண்ணினார். ஆனாலும், உப்பு சேர்க்கலாமா? கூடாதா? திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தார். அதில் கூடாது என்று பதில் கிடைக்கவே எண்ணத்தைக் கைவிட்டார். இதன்பின், ஒரு மாதத்திற்குள் முருகனருளால் மெலிந்த உடல் சீரானது. இதன்பின், பச்சைப் பயறும், பச்சரிசியும் கலந்த உணவே அவரின் சாப்பாடானது.
ராமேஸ்வரத்தில் முருகனை வழிபட்டு கவசநூல் ஒன்றை எழுதினார். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆக முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு சண்முக கவசம் பாடினார். எழுத்துக்கு ஒரு பாடலாக இந்நூலில் முப்பது பாடல்கள் அமைந்தன.
பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். காஞ்சிபுரம் சென்ற போது, பணம் தீர்ந்து விட்டது. அங்கிருந்து ஊர் திரும்ப ஆயத்தமானார். அப்போது, இளைஞன் ஒருவன், குமரகோட்டத்தைப் பார்க்கவேண்டாமா? என்று சொல்லி அவரைக் கையோடு அழைத்துச் சென்றான். கோயிலில் கொடிமரம் அருகில் செல்லும்போது, அந்த இளைஞனைக் காணவில்லை. தன்னுடன் வந்தது முருகனே என்று அறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
பாம்பன் அருகிலுள்ள பிரப்பன்வலசை மயானத்தில் ஒரு குழிக்குள் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். முருகன் அருள் கிடைக்காமல் அங்கிருந்து எழுவதில்லை என முடிவெடுத்தார். இடைவிடாமல் ஆறெழுத்து மந்திரம் ஜெபித்தார். 35வது நாள் நள்ளிரவில் முருகன் தோன்றி சுவாமிக்குத கராலய ரகசியம் என்னும் மந்திர உபதேசம் செய்தார்.
திருவாதவூர், மதுரை, சிதம்பரம், காசி தலங்களுக்கு யாத்திரை செய்து விட்டு, சென்னையில் தங்கியிருந்தார். அவரது தாயார் இறந்த போன செய்தியறிந்தும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. பற்றற்றே வாழ்ந்தார். அன்னை நற்கதி பெற முருகனிடம் வேண்டிக் கொண்டார்.
ஒருநாள் சென்னை தம்புச்செட்டி தெருவில் நடந்து சென்றபோது, குதிரை வண்டி மோதி காலில் முறிவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயதாகி விட்டதால் குணமாக வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசத்தை பாராயணம் செய்து வந்தார்.
விபத்து நடந்த 11ம் நாளில் வானில் வண்ணமயில்கள் இரண்டு நடனமாடுவதைக் கண்டு அதிசயித்தார். முருகனருளால் கால்முறிவும் குணமானது. வாழ்வின் இறுதியை அடைந்த பாம்பன் சுவாமி சீடர்களை அழைத்து சென்னை திருவான்மியூரில் சமாதி அமைக்க கேட்டுக் கொண்டார். அதன்படியே சமாதிஅமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இவர் பாடிய 6666 பாடல்களும் முருகன் அருளை நமக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment