Saturday, July 25, 2015

மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும்

மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன் தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும் அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக பிறகு எழுதுகிறேன்.
ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குரிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.
மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த பகுதி ஏழு வகைப்படும்.
1) நமஹ: ந என்றால் இல்லை என்று பொருள். ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது "நான் இல்லை" என்று பொருள்படும். அதாவது அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில் நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம் ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்ட தெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது. உதாரணத்திற்கு "ஓம் கணேசாய நமஹ" என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன நான்கிலும் மெல்ல மெல்ல‌ பதியத்தொடங்கும்.
2) ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது,
அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
3) ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச‌த்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
4) வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.
5) வௌஷட்:இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
6) ஹும்:இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
7) பட்:சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழு பண்புகள் இருக்கும். அவை 1) அம்மந்திரத்தை வெளிக்கொணர்ந்த ரிஷி, 2) மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ், 3) அந்த மந்திரத்தின் தேவதை, 4) அதன் மூல சக்தியான பீஜம், 5) அதன் சக்தி, 6) இனைக்கும் பகுதியான கீலகம், 7) நம் உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.
மந்திரங்களை குறித்து நமக்கு ஓரளவிற்கு புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் அடிப்படைகளான "ஜென்மா, கர்மா, ஆத்மா, தர்மா" ஆகியவற்றை குறித்து அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.

No comments:

Post a Comment