Sunday, July 26, 2015

சிவலிங்கத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள்!!!

சிவலிங்கத்தை வேறு விதமாக கற்பனை செய்துக்கொண்டு பரிகாசம் செய்பவர்களும் உண்டு அவர்களுக்காகன பதிவு இது, மேலும் சிவலிங்கத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களும் அடங்கும்.
கற்பனை வேறு, யதார்த்தம் வேறு. கயிறு பாம்பாகத் தோன்றுவது போல அவரவர் எண்ணங்களை ஒத்த வடிவங்களில் அது தோன்றுகிறது. இடை விடாது அதே சிந்தனையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அது அப்படித் தோன்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், நம்மை விட அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதுவே அவர்கள் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது. வள்ளலாரிடம் சிலர் இப்படி கேட்டதற்கு, அவர் அழகாகவும், தெளிவாகவும் பதில் சொன்னார். ஆத்ம ஜோதியை அருட்ஜோதி சூழ சிவ ஜோதி விளங்குகின்றது என்றார்.
எவ்வளவு உயர்ந்த கண்ணோட்டம். உங்கள் எண்ணங்களும், கண்ணோட்டங்களும் உயர உயரத்தான் வாழ்க்கை உயரும். எனவே தவறான உதாரணத்தை மனதில் கொண்டவர்கள் தானே அந்த தவறின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருப்பார்களேயன்றி, அதனால் லிங்கத் திருமேனிக்கு எந்த வித இழுக்கும் வந்து விடப் போவதில்லை. உண்மையை மறைக்க முயற்சி செய்வது கூடும். ஆனால் உண்மையை அழிக்க முடியாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும். பொய்யானவைகள் வரும், அழியும். உண்மை அழியாது.
சிருஷ்டி காலத்தில் உயிர்கள் எப்படி உருவானதோ ? அதேபோல் லயமாகி ஒடுங்கி தோன்றிய இடத்திற்கே மீண்டும் செல்கின்றன என்பதின் தத்துவக் குறியீடே லிங்கம். லயமாகிய ஒடுக்கம் லிம் என்கிற பீஜத்தாலும், சிருஷ்டி என்கிற தோற்றம் கம் என்ற பீஜத்தாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி லயம், ஒடுக்கம் என்ற இரு தத்துவங்களுமே லிங்கம் என்று பொருள்படுகின்றன. பிரளய காலத்தில் ஒடுக்கமும், பிறகு அங்கிருந்து சிருஷ்டியும் தோன்றுவதன் காரணப் பொருளாக விளங்குவது பராசிவமாகும். இந்த பராசிவத்தின் சின்னம் லிங்கமாகும்.
லிங்கமானது உரு, அரு, அருவுரு என்ற மூன்று ரூபங்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. இதையே ஆகமங்கள் தத்துவம், மூர்த்தி, பிரபாவம் என்று குறிப்பிடுகின்றன. உரு என்பதை சகளத்திருமேனி என்பர். தலை, உடம்பு, கை, கால் முதலிய உறுப்புகளால் அமைந்த மகேஸ்வர வடிவங்கள் யாவும் உரு எனப்படும். நான்முகன், திருமால், ருத்ரன், மகேஸ்வரன் போன்ற இறைவனின் பல்வேறு தத்துவங்கள் இந்தத் திருமேனிகளில்தான் காணப்படும். இந்தத் திருமேனிகள் எல்லாம் மந்திர வடிவங்கள். இதையும் யோகவடிவம், போகவடிவம், கோபவடிவம் என்ற மூன்று வகையாகச் சொல்வார்கள்.
போக வடிவம் என்பது இறைவனின் நின்றகோலம், இருந்தகோலம், கிடந்தகோலம், வாகனங்களில் அமர்ந்தகோலமாய் ஆடை, அணிகலன்களோடு சாந்தமாய், அபயகரத்துடன் கூடிய தோற்றமாகும். யோகவடிவம் என்பது யோகமுத்திரையுடன் ஆருள்புரியும் தன்மையோடு விளங்கும் வடிவமாகும். கோபவடிவம் என்பது கொடியவர்களை வதம் செய்யும் விதமாக பலவகையான ஆயுதங்களை கையில் ஏந்தியபடி அச்சுறுத்தும் விதமாக காட்சிதரும் தோற்றமாகும். சம்ஹார ரூபம் என்றும் இதைச் சொல்வதுண்டு. ஆக இந்த மூன்று வடிவங்களும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற தத்துவங்களை வளக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூன்று தத்துவங்களுக்குள்ளும் மறைபொருளாய் திரோபாவசக்தியும், அனுக்கிரஹமும் இருக்கிறது.
அரு – உருவமில்லாதது. இதுவும் சிவலிங்க வடிவமே ! இதை நிட்களதிருமேனி என்பர். எந்தவித உறுப்புகளும் இன்றி கோளவடிவில் கோளவடிவில் காணப்படும் லிங்கம். இந்த வடிவமானது, சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய சான்கு தத்துவங்களைக் குறிக்கக்கூடியது. உலகாயத்தில் உழன்று கொண்டிருக்கும் சர்வகோடி ஜீவராசிகளுக்கும் முக்தியளிக்க வல்லமையுடைய பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளின் உடலிலும் ஆத்மாவாய் இருக்கிறது. இப்படி சர்வகோடி ஜீவராசிகளும் முக்தியடையும் பொருட்டு பிரளய காலத்தில் ஒன்று சேர்ந்து பரமாத்மாவாய் மாறிவிடுகின்றன. பிறகு சிருஷ்டியின் காலத்தில் தனியே பிரிந்து தனித்தனி ஆன்மாவாய் தோன்றுகின்றன. இப்படி ஆன்மாக்கள் வருவதும், போவதுமாய் இருக்கும் தத்துவத்தைக்குறிப்பதே லிம்,கம் எனப்படும். லிம்கமே லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
அரு, உரு – சகளநிட்கள லிங்கம்.
உருவமின்மையும், உருவமும் கலந்த வடிவமே சகளநிட்களம் என்று ஆகமங்களால் அழைக்கப் படுகின்றது. இதை முகலிங்கம் என்று கூறுவார்கள். இந்த முகலிங்கம் ஆட்யம், அநாட்யம், சுரேட்யம், சர்வசம் என்று நான்குவகைப்படும். இந்த லிங்கமானது மூலம் நாற்சதுர வடிவம் கொண்ட பிரம்ம பாகமாகவும், அதாவது படைத்தல் தொழிலைக் குறிப்பதாகவும், மத்தியம் எட்டுபட்டை வடிவம் கொண்டு எட்டு சக்திகளைக்குறிப்பதோடு, ஒன்பதாவது சக்தியான மனோன்மணிசக்தியும் சேர்ந்து நீரின் அதிபதியான திருமாலின் சக்திகளாகி காத்தல் என்கிற தத்துவத்தை குறிப்பதாகவும், அதற்கு மேலே உள்ள கோளவடிவமான ஜோதிவடிவமான ருத்ரவடிவம் சம்ஹாரம், த்ரோபாவம், அனுக்கிரஹம் என்ற மூன்று தத்துவங்களை குறிப்பதாகவும் அமைந்துள்ளன. இதில் சிவபாகமான ஜோதிபாகத்தில் சிறு உருண்டை வடிவ ஆயிரம் முகங்களை உடையது ஆட்யம் எனப்படும். சிவபாகத்தில் எந்த வடிவமும் இல்லாதது அநாட்யம் எனப்படும். சிவபாகத்தில் சிறு உருண்டை வடிவ செங்குத்தான 108 முகங்களை உடையது சுரேட்யம் எனப்படும். சிவபாகத்தில் முழு உறுப்புகளை உடைய லிங்கம் சர்வசம் எனப்படும். இதில் ஒருமுகம் முதல் ஐந்து முகம் வரை சிவமுகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
இப்படி சிவலிங்கமானது உருவலிங்கம் நான்காகவும், அரூபலிங்கம் நான்காகவும், அரூபஉருலிங்கம் ஒன்றாகவும் ஒன்பது பேதமாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேதங்களே அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பலவகை லிங்கங்களாய் காணப்படுகின்றன.
இதுவல்லாமல் சுயம்புலிங்கங்கள் இயற்கையாகவே தானாகவே தோன்றி அருள் புரிவதுவும் உண்டு. இவற்றை அருட்கொம்பு லிங்கங்கள் என்பார்கள். பூமியின் அடியில் இருக்கும் பிரம்மாண்டமான பாறையின் நுனிக் கொம்புகளை சுயம்புலிங்கம் என்பர். பூமிக்கடியில் இரண்டு பெரிய பாறைகள் உராய்ந்து கொள்ளும் பொழுது ஏற்படும் காந்த விசை அப்பாறையின் நுனிக்கு ஈர்க்கப்படும். அப்படி பாறையின் நுனிக்கு ஈர்க்கப்பட்ட அந்த விசையானது அருட்காந்த அலைகளாக மாறி உயிர்களை தம்பால் ஈர்க்கின்றன. எனவேதான் தன்னையும் அறியாமல் அதன் ஈர்ப்பில் மயங்கி பக்தியில் திளைக்கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளும் அதன் ஈர்ப்பில் மயங்கி தன்னையும் அறியாமல் பால் சுரக்கின்றன. இப்படிப்பட்ட சுயம்பு லிங்கங்களில் அறிந்தவை 68 என்றும், அறியாதவை பலகோடி என்றும் ரிஷிகள் கூறியுள்ளனர். இந்த சுயம்புலிங்கங்கிலும் மூன்று பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை நீரில் மூழ்கி இருக்கும் நிர்மூல லிங்கம், மலையை ஆதரமாகக் கொண்ட சமூல லிங்கம், மண்ணை ஆதாரமாக உடைய பிருத்வி லிங்கம் என்பவை ஆகும். இது போல புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்கங்களும் உண்டு.
கரையானால் பலவகை தாதுக்கள் கூடிய மண்ணால் உருவாக்கப்பட்ட புற்று சிவனின் சிரசு முடி எனப்படுகிறது. இந்தப் புற்றில்தான் சிவபெருமானின் சங்கராபரணமாகிய கருநாகம் குடியிருக்கும். இதில் காலத்தால் அழியாமலும், மழையில் கரையாமலும், இயற்கை சீற்றங்களால் சிதையாமலும், தாவரங்கள் வளராமலும், பிரகாசமாய், மூன்று கண்கள் உடையதும், ஐந்து தலைகளோடும் கிழக்கு பார்த்து அமைந்த புற்று சிவவான்மீகம் என்று போற்றி வணங்கப்படுகிறது. இந்த புற்றானது ருத்ர ஸ்தலம் என்றும், சுயம்பு புற்று ஸ்தலம் என்றும் ரிஷிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புற்றின் மேலே நூலால் கட்டிய ஸ்படிகமணியையோ அல்லது ருத்ராட்சத்தையோ தொங்கவிட்டுப் பார்த்தால் நொடிக்கு மூன்று சுற்று சுற்றும். அப்படி சுற்றும்படி அமைந்த புற்றுக்கள் ஜீவ புற்றுலிங்கங்கள் என்றும், சிவனின் சகதி களஞ்சியம் என்றும் போற்றி வணங்கப்படுகிறது. இவ்வகை புற்றைச் சுற்றி நீர்வளம் நிறைந்திருக்கும். இவ்வகையான புற்றைக் கண்டுபிடித்து ஆலயம் எழுப்பும் அடியார் அடையும் பேற்றினை சொல்லி முடியாது.
எனவே உங்கள் அறிவின் திறத்தை பயன்படுத்தி நல்லதையே பற்றுங்கள், நல்லதையே எண்ணுங்கள் நல்லதையே பெறுவீர்கள்
தகவல் பகிர்வர் https://www.facebook.com/ram5665
மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்

No comments:

Post a Comment