Monday, August 10, 2015

உன் மதமா? என் மதமா?ஆண்டவன் என்ன மதம்?

by எளியன் i
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறி உலக சிந்தனையாளர்களை யெல்லாம் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் பார்க்கவைத்தவர் வடலூர் வள்ளலார். இவர் உலகத்தில் தோன்றிய எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி அதன் உயிர்க்கொலையைக் கண்டித்தார். முக்கியமாக பல தெய்வ வழிபாடு கொண்ட தமிழகத்தில் உருவ வழிபாட்டை மறுத்து அருவஉருவ வழிபாடான ஒளி வழிபாட்டை அமைத்தார்.
ஆன்மீகத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த, மக்கள் மத்தியில் சாங்கியம் சம்பிரதாயங்கள் புரையோடிப்போயிருந்த அந்தக் காலத்தில் மூடநம்பிக்கை களை எதிர்த்த வள்ளலார் ‘கண்மூடி பழக்கம் மண்மூடிப் போக’ எனச் சாடுகிறார். குறிப்பாக சிதம்பரத்தில் தீட்சித பிராமணர்கள் இவரை உள்ளே அனுமதிக்காததை நினைத்து கடலூரிலே சித்திவளாகத்தை நிறுவினார்.
மணிமேகலை அட்சய பாத்திரத்தைக் கொண்டு ‘பசிப்பிணி அறுக பாரகம் அடங்கலும்’ என்றதைப் போல மக்களின் பசியைப் போக்க எண்ணியே அன்னதான இயக்கத்தை தமிழகத்தில் தொடங்கிவைத்தவர் வள்ளலார். வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது. இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்பு அணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார். அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. உணவு தயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாக வந்துவிடுகிறது.
தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடக்கும்.
அவர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சென்னையிலேயே கழித்தவர். அப்போது சென்னையில் கந்தகோட்டம் கோயிலில் அன்னதானம் இடப்பட்டிருக்கிறது. அதனால் “தருமமிகு சென்னை வளர்கந்தகோட்டத்துள்” எனப் பாடினார்.
சித்திவளாகத்திலே ஒவ்வொருவருக்கும் தேர்ந்தெடுத்து ஒரு வேலையை அவரே கொடுத்தார். அங்கு ஜோதியை 12 வயதுக்குள்ளும் 72 வயதுக்கு மேலும் உள்ளவர்களே தீபம் ஏற்றவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வகுத்தார். அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்ட தில்லை. ஜோதி தேகமான அவர் வெண்மையான வஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு, தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. இறைவன் ஒளி வடிவில் அருளுகிறார் என்பதை உணர்த்த வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையை உருவாக்கினார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று அமைந்த இச்சபையின் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 11.30 மணி மற்றும் இரவு 7.30க்கு நடக்கும் பூஜையின்போது இந்தத் தீபத்துக்கும், இதன் பின்புறமுள்ள திரைகளுக்கும் பூஜை நடக்கும். பின்பு, முன்மண்டபத்திலிருக்கும் சிற்சபை, பொற்சபையில் தீபாராதனை செய்யப்படும். ஞானசபையின் நுழைவு வாயிலில், "புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்' (மாமிசம் உண்ணாதவர்கள்) என்று எழுதப்பட்டிருக்கிறது. அசைவத்தை நிறுத்த விரும்புவோர் இதனுள் சென்று வருகின்றனர். இச்சபையில் வள்ளலார் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்' பொறிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை தந்தை பெரியார் வள்ளலாரின் ஆன்மிகப் புரட்சிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வடலூர் வள்ளலார் கோயிலுக்குள் சென்றார். அங்கே ‘புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்’ என்பதைப் பார்த்துவிட்டு நாம் புலால் உண்பவர்கள். அவர் கட்டுப்பாட்டை மீறக் கூடாது என நுழையாமல் வந்துவிட்டார்.
வள்ளலார் எழுதிய பாடல்கள் திருவருட்பா ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப்பட் டுள்ளது. அதை இலங்கை ஆறுமுக நாவலர் சிலரின் தவறான பிரச்சாரத்தால் வள்ளலார் எழுதியது அருட்பா இல்லை மருட்பா என்று வழக்குத் தொடுத்தார். பிறகு ஒரு சந்தர்ப்பத்திலே வள்ளலாரை நேரில் பார்த்த ஆறுமுக நாவலர் பார்த்த மாத்திரத்திலே அவர்மேல் அன்பு கொண்டு அவர் எழுதியது அருட்பாதான் என்று ஒப்புக்கொண்டார். அதேபோல் ஒரு வழக்கின் காரணமாக வள்ளலார் நீதிமன்றத்துக்கும் வந்தபோது அவரின் ஜோதிமயமான தோற்றத்தைக் கண்டு நீதியரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் தன்னையறியாமல் எழுந்து நின்று வணங்கி வரவேற்றனர்.
வள்ளலார் கொள்கைகள்,
• கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
• புலால் உணவு உண்ணக்கூடாது.
• எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
• சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
• இறந்தவர்களை எறிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
• எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
• பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
• கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.
• சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
• எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
வள்ளலார் ஆன்ம நெறியாளர். சிந்தனையாளர், புரட்சியாளர், செயல் வீரர், பசிப்பிணி நீக்க அவர் செய்த தொண்டு வரலாற்றின் தொடக்கமாகும். இது மட்டுமல்ல சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் நிரந்தரமாக்க நிறுவிய பெருமையும் அவரைச் சேரும். எனவே அவர் பிற சமயச் சிந்தனையாளர்களிடமிருந்து மாறுபட்டு, தனக்கென புதுவழி கண்டவராக அமைகிறார். தமிழக, இந்திய, உலகச் சூழ்நிலைகளை வெகு ஆழமாக அறிந்தவராக அவர் காணப்படுகிறார். பள்ளி சென்று கல்வி கற்காத அவரிடம் கரை கடந்த கல்வி ஞானமும் தீர்க்க தரிசனமும் காணப்படுகின்றது. காலத்தை வென்று நிற்கும் அவரது இலக்கியம் இவ் உண்மையை உணர்த்தும்.
அவர் எங்ஙனம் கற்றார்? கருவிலே அவர் திருவுடையவர் என்பதில் ஐயமில்லை. ஓதாது உணரும் பாங்கும் அவரிடம் இருந்தது. வாழ்க்கை முழுவதும் இடைவிடாது கற்று வந்த அவரின் அறிவுத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால் அவர் எங்ஙனம் கற்றார் என்பதை முழுமையாக விளக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்படையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
வள்ளலார் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
வள்ளலாரின் தந்தையாருடைய முதல் ஐந்து மனைவியர் இறந்தனர் என்ற செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்ச்சியும், எட்டாவது மாதத்திலேயே தந்தையை இழந்த அவரது தாயின் (தந்தையின் ஆறாவது மனைவி) விதவைக் கோலமும் வள்ளலார் மனதை பெரிதும் பாதித்திருக்கவேண்டும். மரபான இந்திய திருமண முறையை எதிர்த்து அவர் செய்த பெரும் புரட்சிக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது எனலாம். திருமணத்தில் ஆர்வமற்று இருந்த அவர் வற்புறுத்தலால் ஏற்பட்ட தன் திருமணத்திற்குப் பின்னர் மனைவியைக் காமப் பொருளாகவோ, ஏவல் அடிமையாகவோ, உடைமையாகவோ கருதாது ஒரு சகோதர மனித ஜீவனாக மதித்துப் போற்றினார்.
ஆங்கிலக் கல்வியிலும் முறையான பள்ளிக் கல்வியிலும் அவர் ஆர்வமற்று இருந்தார். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், சத்திய ஞான சபையையும் நிறுவியவர் வள்ளலார் ‘எல்லா உயிரையும் தம் உயிர் போல எண்ணுதல் வேண்டும். ஜீவஹிம்சை கூடாது. புலால் உண்ணக் கூடாது’ என்று பல ஜீவகாருண்யக் கருத்துக்களை முன்வைத்தவர். ‘உயிர்களின் பசிப்பிணி போக்குவதே இறைவனை அடையும் எளிய வழி’ என்று அன்பர்களுக்கு எடுத்துரைத்தவர்.
“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
என்று உலக உயிர்களுக்காக இரங்கியவர். மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு ஒரு படலில் பாடுகிறார்,
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”
பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள்.
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால் எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந்தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
மனிதர்களின் போக்கை மாற்ற எவ்வளவோ போராடிய வள்ளலார் ஒருகட்டத்திலே ஒரு அறையிலே போய் திருக்காப்பிட்டுக்கொண்டார். அவ்வறையை வெகுநாள் திறக்காமலே வைத்திருந்தார்கள். பிறகு ஒருநாள் திறந்தபோது ஒரு அகல்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. வள்ளலார் தேகம் காணப்படவில்லை. அவர் தன் உடலோடு மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ் ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது.
தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர்.
மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.
1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் இங்கு ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.
இவர் மாணிக்கவாசகரை குருவாக ஏற்றுக்கொண்டவர். முதலில் சன்மார்க்க நெறியைப் பரப்பியவர் மாணிக்கவாசகரே. வள்ளலாரே “மாணிக்க வாசகா நின்பாடல்” எனத் தொடங்கி அவரின் கருத்துகளை தன் பாடலில் எடுத்தோதுகிறார். அவரைப் பின்பற்றி சுத்த சைவ சன்மார்க்க சங்கத்தை நிறுவினார் வள்ளற்பெருமான். ஒரு உயிரை வதைக்கக்கூடாது என்பது உயர்ந்த கொள்கைதானே
http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=406

No comments:

Post a Comment