Friday, October 24, 2014

அரவிந்தர் எனும் ஆன்மிகப் புரட்சியாளர் !!!

துச்சேரி என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருவது மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்தான். இந்த அமைதிப் பூங்காவில் ஆன்மிக நெஞ்சங்கள் தியானத்தில் ஆழ்ந்து ஸ்ரீஅரவிந்தரின் அருளாசிக்குப் பாத்திரமாகி வருவது பல்லாண்டுகள் கடந்த நடைமுறைதான். 1926ம் ஆண்டு, நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் இன்றளவும் ஸ்ரீஅரவிந்தரின் கோட்பாடுகளை ஒட்டியே அவற்றை இன்னும் மேம்படுத்தும் உத்வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. ஸ்ரீஅரவிந்தர் யார்? இந்திய விடுதலைக்கு 45 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ம் தேதி கல்கத்தாவில் அவதரித்தார் அரவிந்தர்.
டாக்டர் கிருஷ்ண தனகோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியரின் மூன்றாவது பிள்ளை. அவருடைய இயற்பெயர் அரவிந்த அக்ராய்ட் கோஷ். அரவிந்தரின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு அவருடைய இல்லத்தில்தான் தொடங்கியது. ஆங்கிலேய மோகம் கொண்டு, ஆத்திகத்தையும், இந்து மத சம்பிரதாயங்களையும் வெறுத்த தந்தையார் தன் மகனுக்கு ஆங்கில மொழி மூலமாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கச் செய்தார். தாய்மொழியான வங்காளத்தை அரவிந்தர் அறிந்தார் இல்லை. அதுமட்டுமன்றி அவருடைய ஏழாவது வயதிலேயே கல்வி கற்க தன் மூத்த இரண்டு மகன்களுடன் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் கிருஷ்ண தனகோஷ்.
இங்கிலாந்து படிப்பு அரவிந்தருக்கு இந்திய ஆன்மிகக் கருத்துகளை எடுத்துச் சொல்லவில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் ஒரு வரி கூட அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தில் படித்த காலத்தில் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொதித்தவர் அரவிந்தர். இந்தியர்களுக்கு ஆதரவாக ‘தாமரையும், குத்துவாளும்’ என்ற பெயரில் ஒரு ரகசிய புரட்சி இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார் அரவிந்தர். இந்தியா அடிமைப்பட்டு அல்லலுறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனாலேயே மிகவும் கௌரவமான ஐ.ஸி.எஸ். கல்வியில் வெற்றி பெற்றாலும், இறுதியான குதிரை சவாரி தேர்வில் வேண்டுமென்றே பங்கேற்காமல், தேர்ச்சி பெறாமல் இருந்துவிட்டார். அப்படித் தேர்ச்சி பெற்று, பதவியும் பெற்றுவிட்டால் தாமும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட பணியாளாக, தாய்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படுபவராக மாற வேண்டியிருக்குமே என்ற குற்ற உணர்வால் ஐ.ஸி.எஸ். தேர்வு பெறவில்லை அவர். இந்தியாவுக்குத் திரும்பி, தந்தையாரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே விடுதலை வேள்வியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார் அரவிந்தர்.
தேசிய உணர்வு கொண்ட புரட்சி இளைஞர்கள் தம் வழிகாட்டியாக அவரைப் போற்றி, பின்பற்றி வந்தார்கள். அப்போது பீகார் மாநிலத்தின், முசாவிக் மாவட்ட நீதிபதி கின்க்ஸ்போரட் மீது வெடிகுண்டை வீசியதாக ஒரு வழக்குப் பதிவாகி விசாரணை நடந்துகொண்டிருந்தது. குண்டு வீச்சு சம்பவத்தில் கோச் வண்டியில் பயணம் செய்த திருமதி பிரிங்கில் கென்னடியும் அவரது மகனும் இறந்துவிட, ஆங்கிலேய அரசு சட்ட அதிகாரத்தை முடுக்கிவிட்டது. இளைஞர்களின் எழுச்சிக் கனலாகத் திகழ்ந்த அரவிந்தர் மீது சந்தேகப்பட்டது போலீஸ்.
அதையடுத்து அரவிந்தர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்னுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலமாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றிருந்தார் அரவிந்தர். அவர்கள் அனைவருமே அவருடைய விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த உள்ளார்ந்த உணர்வுகளுக்குப் பலனில்லாமல் போகவில்லை. அரவிந்தர் நிரபராதி என்று தீர்ப்புக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், வழக்கு நடந்த ஓராண்டு காலத்தில் அலிப்பூர் சிறையில்தான் ‘ஆசிரம வாசம்’ செய்ததாகவே அவர் குறிப்பிட்டார்.
‘என்னுள் குடிகொண்டுவிட்ட ஸ்ரீகிருஷ்ணனை நேரில் தரிசிக்க, அவனைச் சென்றடைய, நான் வெகுநாட்கள் இடையறாது முயற்சித்தேன். ஆனால், நடப்புலக பற்றுகள் என்னை அவனிடம் அண்டவிடாது செய்துவிட்டன. இதற்கு என்னுள் மண்டியிருந்த அஞ்ஞான இருளும் காரணமாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய நெருக்குதல் காரணமாக நான் கடவுளிடம் நெருங்கினேனே, அது என் பாக்கியம்தான்’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். அந்த ஆன்மிக அனுபவத்தில் விவேகானந்தரையும் ஆவிரூபமாக தான் தரிசித்ததாகவும் சொல்கிறார்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மத நன்னூல்கள் பலவற்றையும் அவர் படித்து ஆனந்தித்தார். தன்னை இந்துமதக் கோட்பாடுகள் நெகிழ வைத்ததையும் தனக்குள்ளிருந்து இறைவன் அடிக்கடி பேசுவதையும் அவரால் பரிபூரணமாக உணரமுடிந்தது. சிறை வாழ்க்கைக்குப் பிறகு அரவிந்தர் ‘கர்மயோகி’ என்ற ஓர் ஆங்கில வார இதழைப் பிரசுரித்தார். தேசியம், மதம், இலக்கியம், அறிவியல் துறைகளில் உழைப்பதே கர்மயோகி யின் தலையாய கடமை என்று அறிவித்தார். ஆங்கிலேய அரசு அவர் மீது தனிப் பார்வை செலுத்தியது.
கடுமையான அந்தப் பார்வையிலிருந்து தப்ப அவர் தன் நண்பர்களின் உதவியுடன் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பாண்டிச்சேரிக்கு வந்தார். பாண்டிச்சேரியில்தான் பிரெஞ்சுக்காரரான பால் ரிச்சர்டு மற்றும் அவரது மனைவியார் மிர்ரா இருவரும் அரவிந்தரைச் சந்தித்து ஆன்மிக வழிதேடலில் ஈடுபட்டார்கள். மிர்ரா, ஸ்ரீஅரவிந்தரைத் தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியிலேயே ஆன்மிக சிந்தனைகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டார். இவரே, பின்னால் ஸ்ரீஅன்னை என்று வணங்கப் பெறும் லோக மாதாவாகத் திகழ்ந்தார்.
அரவிந்தரும் அவருடைய நண்பர்களும் அன்றாடத் தேவைகளுக்கான செலவை சரிகட்ட பெரிதும் துன்பப்பட்டனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளில் கூடப் பற்றாக்குறை இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய அரசு அவரை எப்படியாவது பிடித்துத் தன் யதேச்சாதிகாரத்துக்குக் கீழே கொண்டுவரப் பெரிதும் துடித்தது. அவருக்குப் பல வகைகளில் ஆசை காட்டியது. ஆனால், தன்னுடைய ஆன்மிக சிந்தனை, சேவைக்கு பாண்டிச்சேரியே உகந்த இடம் என்று அவர் தீர்மானித்தார். தான் அங்கே தங்கியிருப்பதை பகிரங்கமாக அனைவருக்கும் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்தார்.
தான் மறைந்து வாழவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அலிபூர் சிறையில் இருந்தபோது யோகப் பயிற்சியை மேற்கொண்ட அவர், புதுப்பொலிவு பெற்றதை உடனிருந்த கைதிகள் ஆச்சர்யமாக கவனித்தார்கள். எடை குறைந்தாலும் அவர் முகத்திலும், உடலிலும் தேஜஸ் கூடியிருந்தது. அதற்குக் காரணம் என்ன என்று சக கைதிகள் கேட்டபோது வெறும் மௌனத்தையே அவர் பதிலாகத் தந்தார். இருபத்தெட்டு வயது நிரம்பிய பிராயத்தில் பதினான்கு வயதான மிருணாளினியை அரவிந்தர் மணந்து கொண்டார்.
ஆனால், அவரது அரசியல் ஈடுபாடு, தொடர்ந்து சிறைவாசம், ஆங்கிலேயப் பார்வையி லிருந்து தப்ப பாண்டிச்சேரி வாசம் என்று அவருடைய பிரிவால் தனித்து விடப்பட்டார் மிருணாளினி. ஆனால், பல கடிதங்கள் எழுதி மனைவியையும் ஆன்மிக நெறிக்கு உட்படுத்தினார் அரவிந்தர். தன் முப்பத்திரண்டாவது வயதில் இவ்வுலகை நீத்த மிருணாளினி யின் பெயரில் கல்கத்தா வேலூர் மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஒரு அறக்கட்டளையை நிறுவியது, இன்றும் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ளாத வகையில் அரவிந்தரின் மனம் பக்குவப்பட்டிருந்தது. 1926ம் ஆண்டு, நவம்பர் 24ம் நாள், 25 சீடர்களுடன் அரவிந்தர் ஆசிரமம் தொடங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீஅன்னை என்று போற்றப்படும் மிர்ரா மேற்கொண்டார். ஆசிரமம் தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஅரவிந்தர் 1950ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி மகாசமாதி அடைந்தார். ஆசிரம வளாகத்துக்குள்ளேயே ஆன்மிக அன்பர்களின் தரிசனத்துக்காகவும், அவர்கள் தியானம் புரியவும் அவருடைய சமாதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஅரவிந்தரின் இன்னொரு உருவமாகத் துலங்கி, ஆன்மிக ஒளியாகத் திகழ்ந்த ஸ்ரீஅன்னையின் திருவுடலும், அவரது மறைவுக்குப் பிறகு (17.11.1973) ஸ்ரீஅரவிந்தரின் சமாதியோடு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீஅரவிந்தரின் சமாதியில் வணங்கித் துதிப்பவர்கள் அவரது அருளோடு கூட ஸ்ரீஅன்னையின் அருளுக்கும் பாத்திரமாகிறார்கள்.
- சுபஹேமா

No comments:

Post a Comment