Thursday, October 30, 2014

உள்ளத்தே உள்ளதே உண்மை

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.
இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?
விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?
சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.
விழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?
1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.
நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.
இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.
அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்
http://vijayastreasure.blogspot.in/

No comments:

Post a Comment