Saturday, August 23, 2014

வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்

அஞ்சாமல் வாழுங்கள்!
* நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். கருணையில்லாதவர், கொடியவர்களும் மக்களை ஆளக்கூடாது.
* பசி, நோய், கொடிய தவம் இவற்றால் உடலை பலவீனப்படுத்தக் கூடாது. கிடைப்பதற்கு அரிதான இந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும்.
* பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும்.
* கடவுள் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவரை நம் கற்பனைக்குள் கட்டுப்படுத்த முடியாது.
* ஒழுக்கத்திற்கு ஜீவகாருண்யமே அடிப்படை. கருணை இல்லாவிட்டால் ஒழுக்கம் இல்லை.
* யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.
* பிறர் தயவை நாடி ஒருபோதும் பிச்சை எடுத்து வாழ்வது கூடாது. அதே சமயம், நம் தயவை நாடி வருவோருக்கு மறுக்காமல் கொடுத்து உதவ வேண்டும்.
* நல்லவரைக் கெட்டவராகவும், கெட்டவரை நல்லவராகவும் திரித்துக் கூறுவது உலக மக்களின் இயல்பு.
பிறரை மதிக்கப் பழகுங்கள்
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.
* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.
* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.
* தன்னைப் போல பிறரையும் மதிப்பது மனித நேய ஒருமைப்பாடு. தொண்டு மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு உதவி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.
* எங்கும், எதிலும், எப்போதும் இருப்பவர் கடவுள். அவரை ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபட்டால் அவர் திருவருள் கிடைக்கும்.
* அன்பையும், இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.
பசித்தவர்க்கு உணவளியுங்கள்
* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.
* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.
* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம் தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும் கடைபிடிக்க வேண்டும்.
* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும் புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.
நல்லவர்களாக வாழுங்கள்
* இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்பு தான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.
* அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும். பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.
* பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.
* ஆன்மிக உணர்வுடன் ஆண்டவனிடம் சரணடைந்தால் நம் மனம் தூய்மை பெறும். தூய மனம் பேரின்பத்தின் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.
* மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம். மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர். அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.
* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால் தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment