Friday, August 22, 2014

ஆன்மிக சிந்தனைகள் _காஞ்சி பெரியவர்

ஆன்மிக சிந்தனைகள் _காஞ்சி பெரியவர்
நியாயமான தேவை எது?
* இறைவன் நமக்கு கை, கால் என எல்லா உறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நன்றியுணர்வுடன் நாலு பேருக்கு நன்மையை மட்டும் செய்ய வேண்டும். 
* மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியமானது. வாழ்வில் ஒழுங்கு வந்துவிட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகும், நேர்த்தியும் வெளிப்படத் தொடங்கும்.
* வேத விருட்சம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் நம் தமிழ்மண். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதி பாடியிருக்கிறார்.
* நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியே உலகிலுள்ள எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் உத்தமமான எண்ணம்.
* எளிமையாக வாழ்வதே உலகிற்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. நம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்பட ஆடம்பரமாக வாழ்வது கூடாது.
* உணவு, உடை, உறைவிடம் அனைவருக்கும் கிடைத்தால் போதும். மற்றவை எல்லாம் ஆடம்பரம் தான்.
இதுவே நிரந்தர மகிழ்ச்சி
* ஆசையைப் படிப்படியாக குறைக்க வேண்டும். இதனால் துன்பம் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால், மீண்டும் மண்ணில் பிறவி எடுக்கத் தேவையில்லை.
* வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருவனுக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்திருக்கும்.
* வேதம் விதித்த தர்மவழிகளில் நடப்பவன் புண்ணியத்தைத் தேடுகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்.
* சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் சொல், செயல் எல்லாமே புண்ணிய கர்மம் தான்.
* மனதில் எண்ணிலடங்கா ஆசைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், ஆசைப்பட்டு அடைந்த பொருள் அனைத்தும் ஒரே நாளில் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

No comments:

Post a Comment